உதவியும் ஆதரவும் (#11282)

எவரது வதனம் என் ஆராதனையின் இலக்காக இருக்கின்றதோ, எவரது அழகு என் சரணாலயமாக இருக்கின்றதோ, எவரது வாசஸ்தலம் என் இலக்காக இருக்கின்றதோ, எவரது போற்றுதல் என் நம்பிக்கையாக இருக்கின்றதோ, எவரது பாதுகாப்பு என் தோழனாக இருக்கின்றதோ, எவரது அன்பு என் ஜீவனுக்கு உயிராக இருக்கின்றதோ, எவரைப் பற்றிப் பேசுவது எனக்கு ஆறுதலாக இருக்கின்றதோ, எவரது அண்மை என் ஆவலாக இருக்கின்றதோ, எவரது முன்னிலை எனது ஆழ்ந்த நேசமும், அதியுயரிய ஆவலுமாக இருக்கின்றதோ, அவ்வனைத்துக்கும் உரியவரே, உமது ஊழியர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றைப் பெறுவதிலிருந்து என்னைத் தடுத்துவிடாதீர்  என நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.  அதன்பின், எனக்கு இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகளைத் தந்தருள்வீராக.

உண்மையாகவே, நீரே, மனிதர்களுக்கெல்லாம் மன்னராவீர். என்றென்றும் மன்னித்தருளும், அதி தாராளமிகு  இறைவன் உம்மையன்றி  வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

உதவியும் ஆதரவும் (#11283)

என் கடவுளே, எனது பேரன்புமிகு நேசரே, எனது அரசரே, எனதாவலே, உந்தன்பால் என் நன்றியினை எந்த நா எடுத்தியம்ப இயலும்? நான் கவனமற்றிருந்தேன், நீர் என்னை விழிப்புறச் செய்தீர். நான் உம்மிடமிருந்து அப்பால் திரும்பி இருந்தேன், நீர் கிருபை கூர்ந்து என்னை உந்தன்பால் திரும்பிட உதவினீர். நான் இறந்தவன் போலிருந்தேன்; நீர் உமது ஜீவ நீரினால் என்னைப் பிழைத்தெழச் செய்தீர். நான் வாடி இருந்தேன், அதிபெரும் கருணைமிகும் எழுதுகோலிலிருந்து பெருக்கெடுத்து வந்துள்ள உமது தெய்வீகத் திருவாக்கினால், என்னைப் புத்துயிர்ப் பெறச் செய்தீர். 

அரும் பெருங்கடவுளே, படைப்பினம் யாவும் உமது அருட்பாலிப்பினாலேயே தோன்றின; உமது வள்ளன்மை என்னும் நீரிலிருந்தும் உமது கருணை எனும் சமுத்திரத்திலிருந்தும் அவற்றை விலக்கிடாதீர். எல்லாக் காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் உதவி, ஆதரிக்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்டு, அருள் என்னும் சுவர்க்கத்திலிருந்து உமது ஆதி தயவினைத் தேடுகின்றேன். உண்மையிலேயே, நீரே, அருட்கொடையின் பிரபுவும் நித்திய இராஜ்யத்தின் மன்னரும் ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

உதவியும் ஆதரவும் (#11285)

என் கடவுளே, என் ஆண்டவரே, எந்தன் பிரபுவே! நான் எனது சுற்றத்தாரிடமிருந்து பற்றறுத்துக்- கொண்டு, உம் மூலமாக உலகத்தில் வாழும் யாவற்றிலிருந்தும் சுதந்திரமடைந்து, உமது பார்வையில் பாராட்டத் தக்கதனைப் பெற்றிட என்றென்றும் ஆயத்தமாயிருக்கின்றேன். உம்மைத் தவிர வேறெதனிலும் இருந்து விடுதலை பெற உதவக் கூடிய அந்நன்மைகளை என்பால் வழங்கி, எனக்கு, உமது எல்லையில்லாத் தயையினைப் போதிய அளவு வழங்குவீராக. மெய்யாகவே, நிரம்பிய அருளைக் கொண்டுள்ள பிரபு நீரே ஆவீர்.

-The Báb
-----------------------

உதவியும் ஆதரவும் (#11286)

பிரபுவே! நாங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள், பரிவு காட்டுவீராக; நாங்கள் ஏழைகள், உமது செல்வக் கடலிலிருந்து ஒரு பகுதியை அளிப்பீராக; நாங்கள் வறியவர்கள், எங்களின் தேவையைப் பூர்த்தி செய்வீராக. நாங்கள் தாழ்ந்தவர்கள், உமது மேன்மையை அளிப்பீராக. வானத்தில் உலவும் பறவைகளும் பரந்த வெளியில் வாழும் பிராணிகளும் உம்மிடமிருந்தே அன்றாட உணவைப் பெறுகின்றன. எல்லா உயிர்களும் உமது பாதுகாப்பிலும் அன்புக் கருணையிலும் பங்கு பெறுகின்றன. 

இப்பலவீனமானவன்  உமது  திவ்விய அருளைப் பெறாது தடுத்திடாதீர். உமது சக்தியால் ஆதரவற்ற இவ்வான்மாவுக்கு அருள் புரிவீராக.

எங்களுக்கு அன்றாட உணவளித்து, வாழ்க்கையின் தேவைகளை அதிகரிப்பீராக; அதனால் நாங்கள் உம்மைத் தவிர வேறு எவரிடத்திலும் நம்பிக்கை வைக்காதிருப்போம். உம்மிடமே முழுமையாகத் தொடர்பு கொள்வோம். உமது வழியில் நடந்து, உமது மறைபொருளை எடுத்தியம்புவோம்.  எல்லாம் வல்லவரும் மனித இனத்தின் தேவைகளை அளிப்பவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

உதவியும் ஆதரவும் (#11287)

கருணைமிக்கப் பிரபுவே! நாங்கள் உமது  புனித கதவருகில் அடைக்கலம் பெற்றிருக்கும், உமது வாயிற்படியின் ஊழியர்கள் ஆவோம். இந்தப் பலமான தூணைத் தவிர வேறெந்த புகலிடத்தையும் நாடிடவில்லை; உமது  பாதுகாப்பைத் தவிர, வேறெந்த உறைவிடத்தின்பாலும்  நாங்கள்  திரும்பிடவில்லை.  எங்களைப் பாதுகாத்து, எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு ஆதரவளித்திடுவீராக. உமது  நல்விருப்பத்தை மட்டுமே நேசித்திடவும், உமது  புகழை மட்டுமே உச்சரித்திடவும், உண்மை எனும் பாதையை மட்டுமே பின்பற்றிடுபவர்களாகவும் எங்களை ஆக்கிடுவீராக. அதனால் நாங்கள் உம்மைத்  தவிர மற்றனைத்தையும் கைவிடுமளவுக்குச் செழுமை பெறக் கூடும்; உமது வள்ளன்மை எனும் சமுத்திரத்திலிருந்து எங்கள் பரிசுகளைப் பெற்றிடச்  செய்திடுவீராக. அதனால் நாங்கள் என்றென்றும் உமது  சமயத்திற்குச் சேவைபுரிந்திட முயன்றிடவும், உமது  இனிய நறுமணங்களை நாலாதிசையிலும் பரவச் செய்திடவுங்கூடும். நாங்கள் அதனால் எங்களை மறந்து, உம்முடன்   மட்டுமே ஈடுபாடு கொண்டு,  மற்றனைத்தையும் கைவிட்டு உம்முடன்   மட்டுமே நேரத்தைச் செலவிடக் கூடும்.

வழங்குபவரே, மன்னித்தருள்பவரே! உமது  கிருபையையும் அன்புக் கருணையையும், உமது  பரிசுகளையும், உமது அருட்கொடைகளையும் எங்களுக்குத் தந்தருளி, எங்களை ஆதரிப்பீராக; நாங்கள் அதனால் எங்களின் இலக்கை அடையக்கூடும். நீரே சக்திமிக்கவர், திறன்- வாய்ந்தவர், அறிந்தவர், ஞானதிருஷ்டியுடையவர்; மெய்யாகவே, நீரே  தாராளமானவர்; மெய்யாகவே, நீரே சகல கருணைமிக்கவர்; மெய்யாகவே நீரே என்றும் மன்னித்தருள்பவர்; மனந்திரும்புதலுக்கு உரியவரும், மிகக் கடுமையான பாவங்களை மன்னிப்பவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

உதவியும் ஆதரவும் (#11288)

பிரபுவே, உமது   பெயரில் வழங்கப்பட்டிருக்கும் விருந்தினை அகற்றிவிடாதீர்; உமது  தணியாத தீயினால் மூட்டப்பட்டுள்ள எரியும் ஒளிப்பிழம்பை அணைத்துவிடாதீர். உமது புகழ், உமது  நினைவு ஆகியவற்றின் மெல்லிசையில் முணு முணுத்திடும் உமது உயிர் நீரை வழிந்தோடுவதிலிருந்து நிறுத்திவிடாதீர். உமது  அன்பெனும் மணத்தைச் சுவாசித்திடும் உமது  இனிய சுகந்தத்தின் நறுமணத்தை உமது  ஊழியர்களுக்குத் தரமறுத்திடாதீர்.    

பிரபுவே! மனுக்குலம் முழுவதன் விதியை உமது பிடியில் வைத்திருப்பவரே! உமது  புனிதர்களின் வேதனைமிக்கக் கவலைகளை ஆறுதலாகவும், அவர்களின் கஷ்டங்களை சுகமாகவும், அவர்களின் தாழ்வைப் புகழாகவும், அவர்களின் சோகத்தைப் பேரின்ப மகிழ்ச்சியாகவும் மாற்றிடுவீராக. 

மெய்யாகவே, ஏகமானவரும், தனியொருவரும், வல்லவரும், சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

